தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
மனநல மருத்துவர் சோபாவின் மீது சாய்ந்திருக்கும் தனது நோயாளி நபரை மூக்குக் கண்ணாடியின் கீழால் கவனித்தார். அவரது பார்வைக்கு நோயாளியின் தலையும், கழுத்தும், இரு பாதங்களும் மாத்திரமே தென்பட்டன. சோபாவின் மீது சாய்ந்து படுத்தவாறே இரு விழிகளையும் மூடியிருந்த நோயாளி கதைத்துக் கொண்டிருந்தார். அவர் தனது வாழ்க்கையின் இருண்ட பகுதிகளைக் கூட எவ்வித செப்பனிடலுமில்லாமல் கூறிக் கொண்டிருந்தார். நோயாளியின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தவாறு மருத்துவர் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தார். மருத்துவர், நோயாளியின் தலைக்கு பின்புறமாக வைக்கப்பட்டிருந்த கதிரையொன்றில் அமர்ந்திருந்ததனால் நோயாளிக்கு தனது மருத்துவரைக் காண முடியவில்லை.
அறை சற்று இருட்டாக இருந்தது. அறையின் கதவுகள் மூடப்பட்டிருந்தமையினால் நோயாளியின் குரல் அந்த அறையைத் தாண்டி வெளியே பரவாதிருந்தது. நோயாளி மெல்லிய தொனியில் கதைத்துக் கொண்டிருந்தார். அத் தொனியை வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுகள் சூழ்ந்திருந்தன. நோயாளியின் பேச்சை மேலும் முன்னெடுத்துச் செல்லத் தூண்டும் விதமாக இடைக்கிடையே மருத்துவர் நோயாளியிடம் குறுக்குக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
"ஆமாம், நீங்கள் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வமாக இருந்தீர்கள் எனக் கூறினீர்கள் அல்லவா? அதன் பிறகு என்ன நடந்தது?" என மனநல மருத்துவர் தனது நரைத்திருந்த தாடியைத் தடவிக் கொடுத்தவாறு நோயாளியிடம் அக் கேள்வியைக் கேட்டார்.
"நான் முற்போக்கு அரசியலின் மீதே ஈர்க்கப்பட்டிருந்தேன். நாங்கள் மறைந்திருந்து இரகசிய அரசியல் நடத்தினோம். அதாவது போலீஸ் மற்றும் ஆட்சியாளர்களுக்குத் தெரியாமல் மறைவாக நடத்தும் அரசியல். நாங்கள் மார்க்ஸ், லெனின் தர்க்கங்களில் ஈர்க்கப்பட்டு மூளை குழம்பிப் போயிருந்தோம். . நாங்கள் மாயலோகமொன்றில் சிக்கிக் கொண்டிருந்தோமென இப்போது தோன்றுகிறது."
இவ்வாறு கூறி விட்டு சற்று விழிகளைத் திறந்த நோயாளி, அறையின் உத்தரத்தைப் பார்த்து விட்டு மீண்டும் விழிகளை மூடிக் கொண்டார். மன நல மருத்துவர், நோயாளி கூறும் வாக்குமூலத்தின் முக்கியமான பகுதிகளை தனது பதிவுப் புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார். மருத்துவருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு பாதேர் மெயின்ஹோப் குழுவில் உறுப்பினராகவிருந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த நோயாளியொருவர் நினைவுக்கு வந்தார். அவரும், இவரைப் போலவே மெலிந்த உடலைக் கொண்டவர்தான்.
" குறிக்கோளின்றி அலைந்து கொண்டிருந்த அரசியலைத்தான் நாங்கள் செய்துகொண்டிருந்தோம். வகுப்புவாதத்தை நாங்கள் எதிர்த்தோம். எம்மை எதிர்க்கும் எவரையும் துரோகியென முத்திரை குத்தினோம். அதன் பிறகு……" நோயாளி சற்று மௌனமானார்.
"ஆமாம்…அதன் பிறகு?" என மருத்துவர் நோயாளியை தொடர்ந்தும் கதைக்கத் தூண்டினார்.
"அதன் பிறகு…. அதன் பிறகு… அதன் பிறகு…. அதன்பிறகு நாங்கள் துப்பாக்கிகளால்தான் பதிலளித்தோம். நானாக ஒருபோதும் துப்பாக்கி விசையை அழுத்தியதில்லை. எனினும் சில படுகொலைகளை எனது கரங்களை உயர்த்தி அனுமதித்திருக்கிறேன். அதனால் எனது கைகளில் குருதிக் கறை படியவில்லை எனக் கூறவும் முடியாது. துரோகியொருவனைக் கொன்றதன் பிறகு விந்தையான ஆசுவாசம் கிடைக்கும். டாக்டர், அந்த… அந்த…. அந்த சந்தோஷத்தை விவரிக்க எனக்குத் தெரியவில்லை. மகிழ்ச்சி நாட்கணக்கில் மனதில் நீடித்திருக்கும். காலையும், இரவும் அதை நினைத்து நினைத்து பூரித்திருக்க முடியும். அந்தக் கொலைகள் குறித்து இன்றும் கூட என் மனதில் பச்சாதாபம் ஏதுமில்லை. ஒருவனின் மனதில் வைராக்கியமும், குரோதமும் நிறைந்திருக்கும் போது அவன் பலமடைகிறான். துரோகியைக் கொன்றதுமே மேலும் மேலும் பலம் பெறுகிறான். இரத்தம்தான் வாழ்க்கை. இதுதான் கசப்பான உண்மை. இரத்தத்தை விடவும் இனிமையான வேறொன்று இந்த உலகத்தில் இருக்கிறதா என்ன?"
நோயாளி பற்களைக் கடித்துக் கொண்டார். மீண்டுமொரு தடவை கண்களைத் திறந்து உத்தரத்தைப் பார்த்துவிட்டு உடனடியாக மூடிக் கொண்டார். மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார்.
"போலிஸார் பகலும், இரவுமாக எங்களைத் தேடிக் கொண்டிருந்ததனால் எமது இயக்கச் செயற்பாடுகள் தேக்கமடையத் தொடங்கின. நான் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவென ஒரு கிறிஸ்தவப் பள்ளிக்குள் ஒளிந்திருந்தேன். அவ்வாறு ஒளிந்திருந்தபோது பலதரப்பட்ட பயங்கரமான எண்ணங்கள் என்னுள்ளே தோன்றத் தொடங்கின. நாங்கள் கொன்றழித்த துரோகிகளின் குரல்கள் எனக்குக் கேட்கத் தொடங்கின. நான் இரவுகளில் பீதியில் ஆழ்ந்தேன். நான் தேவாசனத்தின் அருகில்தான் படுத்துக் கொண்டிருப்பேன். டோர்ச் வெளிச்சமோ, வாகன ஓசைகளோ, பரிச்சயமற்ற மனிதக் குரல்களையோ செவிமடுக்குமிடத்து எனது இதயம் படபடக்கும். வியர்வை வழிந்தோடும். நான் பூஜை மாடத்தின் பின்புறமாக மறைந்துகொள்வேன்.
பள்ளியிலிருந்த அருட்தந்தையின் கருணையினாலேயே நான் இன்னும் உயிரோடிருக்கிறேன். எனது தோழர்கள் அனைவருமே டயர்களில் எரிந்து சாம்பலாகிப் போனார்கள். சிலர் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு சில காலம் பள்ளியில் ஒளிந்திருக்கும் போதுதான், ஒளிந்திருக்கும் ஏனைய உறுப்பினர்களைச் சந்தித்து தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென எனக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது. இவ்வாறாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளச் சென்றபோதுதான் நான் இராணுவத்திடம் அகப்பட்டுக் கொண்டேன்."
நோயாளி வீணைத் தந்தியைப் போல தனது சரீரத்தை உயர்த்தி சிலிர்த்துக் கொண்டார். சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர் சுய சரிதத்தைத் தொடர்ந்தார்.
"அவர்கள் எனது பெருவிரல்கள் இரண்டிலும் சப்பாத்து நாடாக்களால் முடிச்சிட்டுக் கட்டி உத்தரப் பலகையில் தொங்கவிட்டிருந்தார்கள். வலியானது, விரல்களிலிருந்து மணிக்கட்டு, தோள்கள், கழுத்து என பரவி வந்து கொண்டிருந்தது. பெருவிரல் இரண்டினதும் தோல் கிழிந்து கழன்று விழும் என்பதாக எனக்குத் தோன்றியது. அந்த வலியோடு, வதையாளர்கள் தடித்த உருளைக் குழாய்களால் பிட்டத்தில் அடித்துக் கொண்டிருந்தார்கள். நசுங்கிய தக்காளியைப் போல பிட்டங்கள் வெடித்து குருதி கசிந்து கொண்டிருந்தது. பிட்டங்களில் கசியும் இரத்தம் சொட்டுச் சொட்டாக தரையில் பரவிக் கொண்டிருந்தது.
வதையாளர்களின் பூட்ஸ் சப்பாத்துக்களில் மிதிபடும் இரத்தம் பட்டு அறை முழுவதும் இரத்தக் கறையாகவிருந்தது. அடுத்தடுத்த பலகைகளிலும் எமது உறுப்பினர்களைப் போன்ற ஏனைய இனந்தெரியாத நபர்களைக் கொழுவித் தொங்கவிட்டு சித்திரவதை செய்துகொண்டிருந்தார்கள். சிலரை சக்கரத்தில் இட்டிருந்தார்கள். சிலருக்கு வேதனை தாங்காமல் சிறுநீரும், மலமும் தாமாக வெளிப்பட்டிருந்தன. அலறலும், மரண ஓலமும், வதையாளர்களின் கிண்டல் சிரிப்பும் அறை முழுவதும் நிரம்பியிருந்தது.
அன்றைய தினம் முழுவதும் என்னைத் தொங்கவிட்டு சித்திரவதை செய்தார்கள். அதன்பிறகு சக்கரத்தில் வைத்து சுழற்றிச் சுழற்றி லத்தியால் அடித்தார்கள். இவ்வாறு தொடர்ச்சியாக அடிக்கும்போது வலியுணர்வு ஒரு கட்டத்தில் இல்லாது போகும். நரம்பு மண்டலமே செத்துப் போனதுபோல உணர்வுகள் செயலிழந்து விடும். நரம்பு மண்டலத்தின் வலியுணர்வுத் தகவல்களை மூளையானது புறந்தள்ளிவிடுகிறது என்பதை வதையாளர்கள் உணர்ந்து, ‘இவனை இனி எவ்வளவு வதைத்தாலும் பயனில்லை ’ என அவர்கள் கதைத்துக் கொள்வதை நான் கேட்டேன். அதனைத் தொடர்ந்து பொம்படியர் ‘இவனை சிறையில் அடை’ எனக் கூறும் குரலையும் நான் கேட்டேன்.
ஒருவன் கதிரையொன்றில் ஏறி என்னைச் சிறைப்படுத்திக் கட்டியிருந்த பெருவிரல் முடிச்சுக்களை வெட்டிவிட்டான். மரக்கட்டை போல நான் கீழே விழுந்தேன். சிறுநீரும், இரத்தமும் பரவியிருந்த தரையில் எனது முகம் சென்று மோதியதும் நான் மிகச் சிரமப்பட்டு தலையை உயர்த்தினேன். சீருடை அணிந்திருந்த இராணுவத்தினன் ஒருவன் என்னை தரையில் வைத்தவாறு இழுத்துக் கொண்டு சென்றான். இழுத்துக் கொண்டு சென்று ஒரு செல்லின் வாசலில் வைத்து என்னை உள்ளே தள்ளினான். அதன் இரும்புக் கதவைப் பூட்டித் தாழிடும்போதுதான் கண்ணைத் திறந்து பார்த்தேன்.
செல் நிறைந்து வழியும்விதமாக மனித உடல்கள் அங்கு நிறைந்திருந்தன. அனைத்தும் நிர்வாண உடல்கள். சில அமைதியாகக் கிடந்தன. சில மரண ஓலத்தை வெளிப்படுத்தின. சிலவற்றிடமிருந்து முனகலொலி மாத்திரம் எழுந்தன. சில, தெய்வங்களிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தன. அனைத்து தேகங்களிலும் காயங்கள் பழுத்து சீழ்பிடித்திருந்தன. ஒருவரது தேகத்திலிருந்து வெளியாகும் சீழ், அருகிலிருந்த நபரின் உடலை ஒட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையில் சிலர் சிறுநீரிலும், நரகலிலும் தோய்ந்திருந்தார்கள். அங்கிருந்த ஒரு நபரது வாயின் இரு புறமும் கூரிய கத்தியால் கிழிக்கப்பட்டிருந்தன. பயங்கரமான துளைகளிரண்டு அவரது கன்னங்களில் தென்பட்டன. அவற்றிலிருந்து சீழ் ஒழுகிக் கொண்டிருந்தது. ஈக்கள் அவரைச் சுற்றியும் மூடியிருந்தன.
எம்மை ஒரு சிறிய அறையிலேயே அடைத்திருந்தார்கள். அறை இருட்டாக இருந்தது. ஜன்னல் கூட இல்லை. சுவாசக் காற்று வேண்டி சிலர் இரும்பு வாயிலருகே போவார்கள். அந்த இடத்தில் மாத்திரம் சற்று காற்று வரும். இன்னுமொரு சந்தேக நபரை உள்ளேயிட கதவைத் திறக்கும்போது இராணுவத்தினர்கள் வாயிலருகே இருக்கும் நபர்களை பூட்ஸ் சப்பாத்துக்களால் உதைப்பார்கள். இவ்வாறாக எம்மை வாரக் கணக்கில விலங்குகளைப் போல அடைத்து வைத்திருந்தார்கள்.
எனது காற்சட்டை கந்தலாகிப் போயிருந்தது. வாரக் கணக்கில் பற்களை விளக்கவோ, முகம் கழுவவோ வாய்ப்பு தரப்படவில்லை. எமக்கு எமது தேகமே அறுவெறுப்புக்குரியதாக இருந்தது. சிலர் தாங்க முடியாமல் வாந்தியெடுத்திருந்தார்கள். நாங்கள் ஒவ்வொருவரது உடலின் மீது சாய்ந்தே தூங்கிக் கொண்டிருந்தோம். இரவு மிகவும் இருண்டதாகவிருந்தது. நுளம்புகள் நிறைந்திருந்தன. பகலில் தாங்க முடியாதளவு வெக்கையாகவிருந்தது. உளவாளிகள் எவரேனும் உள்ளேயும் இருப்பார்களென எண்ணி நாங்கள் எவரும் ஒருவரோடொருவர் உரையாடிக் கொள்ளவில்லை. சிலர் திட்டிக் கொண்டிருந்தார்கள். பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அழுதுகொண்டிருந்தார்கள்.
அங்கிருந்த ஒருவனுக்குப் பைத்தியம் பிடித்திருந்தது. அவன் அடிக்கடி சத்தமிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான். எம்மிடையே இருப்பவர்கள் மத்தியில் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவன் அவன் தானென எனக்குத் தோன்றியது. அவனுக்கு எதுவும் விளங்கவில்லை. எதையேனும் தனியாகப் பேசிக் கொண்டேயிருப்பான்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள், விசாரிப்பதற்கென என்னை சித்திரவதைக் கூடத்துக்குக் கொண்டு செல்வார்கள். தொங்கவிட்டுத் தாக்குவார்கள். தலையை தண்ணீரில் அமிழ்த்தி வைப்பார்கள். நான் எந்தத் தோழர்களையும் காட்டிக் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு நாள் என்னை விசாரிக்க வேண்டுமெனக் கூறி, கூட்டிச் சென்றது சித்திரவதைக் கூடத்துக்கல்ல. நாம் சிறை வைக்கப்பட்டிருந்த கட்டடத்தின் மேல்மாடியிலிருந்த அலுவலகமொன்றுக்கு என்னைக் கொண்டு சென்றார்கள். அங்கு தோளில் மூன்று நட்சத்திரச் சின்னங்களைக் குத்தியிருந்த அதிகாரியொருவர் ஒரு மேசையினருகே அமர்ந்திருந்தார். அவர் எனக்கு அமர்ந்துகொள்ளுமாறு கூறி கதிரையொன்றைத் தந்தார். வியர்வையும், இரத்தக் கறையும், அழுக்கும் நிறைந்திருந்த எனது கைகளை தூய்மையான அம் மேசையில் வைத்தேன். இராணுவ அதிகாரி சற்று விலகிப் போனார். அதன் பிறகு எனது சரீரத்திலிருந்து கிளம்பிய துர்வாடையைத் தவிர்க்கவோ என்னவோ சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டார். எனக்கும் ஒன்றை நீட்டினார். நான் தலையசைத்து மறுத்தேன்.
'நீதான் எம்மிடம் உண்மையைச் சொல்வதில்லையே…' என அதிகாரி என்னை நோக்கி புகை விட்டவாறே கூறினார். என்னிடம் கூற எதுவுமிமிருக்கவில்லை. நான் தரையை நோக்கினேன்.
'இது உனக்குத் தரப்படும் கடைசி சந்தர்ப்பம். நீ பல்கலைக்கழக மாணவனொருவன் என்பதனாலேயே நாங்கள் இவ்வளவு காலமும் பொறுத்துக் கொண்டிருந்தோம். இல்லாவிட்டால் நீ எப்போதோ டயருக்குள் சாம்பலாகியிருப்பாய்'
'நாங்கள் சாவது ஒரு முறைதான்' என நான் அதிகாரியின் கண்களை நேராகப் பார்த்தவாறு கூறினேன். எனது பதிலைக் கேட்ட அதிகாரிக்கு பலத்த கோபம் வந்தது. இரத்தம் நிறைந்து அவரது முகம் சிவப்பதைக் கண்டேன். என்னைக் கொண்டு சென்று கொன்றுவிடுமாறு அவர் ஆணையிட்டார்.
இரண்டு பட்டிகள் அணிந்திருந்த இராணுவத்தினன் ஒருவன் என்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு சென்று சித்திரவதைக் கூடத்தின் கதவருகே வைத்து எனது பிட்டத்துக்கு பூட்ஸ் காலால் உதைத்தான். நான் சித்திரவதைக் கூடத்தின் தரையில் முகம் குப்புற விழுந்தேன்.
அக் கூடத்தின் மேல் பகுதியில் இரு இளைஞர்களை சக்கரத்தில் போட்டிருந்தார்கள். அறையின் ஒரு மூலையில் கொல்லப்பட்ட இரண்டு இளம் உடல்களை சாக்கினில் போட்டு வைத்திருந்தார்கள். அவர்களது வெளிறிப் போயிருந்த பாதங்களை நான் கண்டேன். அப் பாதங்களில் காய்ந்து போன குருதிக் கறை படிந்திருந்தது.
'இவனை இன்றிரவு கொண்டு போய் வேட்டு வைத்துக் கொன்று இந்த உடல்களோடு எரித்து விடுங்கள்' என இரண்டு பட்டிகள் அணிந்திருந்த இராணுவத்தினன் அங்கிருந்த இராணுவத்தினர்களுக்கு ஆணையிட்டான்.
எனது இறுதிக் கணம் வந்துவிட்டதை நான் புரிந்து கொண்டேன். மரண பயம் தோன்றியது உண்மைதான். எனினும் இந்த வலியும், வேதனையும் அத்தோடு முடிந்துவிடும் அல்லவா என்ற ஆசுவாச உணர்வும் தோன்றியது. ஒரு இராணுவத்தினன் கூர் மழுங்கிய சவரக்கத்தியொன்றால் எனது புருவங்களை மழித்தான். கொல்லப்படவிருக்கும் நபர்களது புருவங்களே மழிக்கப்படும் என்பதை நான் முன்பே அறிந்திருந்தேன். நான் மரணத்தை மிகவும் சமீபித்திருக்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது. சடலங்கள் இரண்டோடு என்னையும் இலக்கத் தகடற்ற வாகனமொன்றில் ஏற்றிச் செல்வார்கள் எனவும் எனக்குத் தோன்றியது. அவ்வாறே அது மேலும் தாமதிப்பது இன்னும் வெளியே இருள் சூழவில்லை என்பதனாலாகும் எனவும் தோன்றியது. நான் மரணத்தின் வாசலுக்கே வந்துவிட்டிருந்தேன். பல்கலைக்கழகத்தில் என்னுடன் கற்று பின்னர் தற்கொலை செய்துகொண்ட இந்திரஜித் எனது நினைவில் வந்தான். நானும் இன்னும் சொற்ப நேரத்தில் மரித்தவர்களிடையே போய்விடுவேன். எனக்கு பெற்றோர் நினைவில் வந்தார்கள். இவ்வளவு இளம் வயதில் நான் மரணத்தை நோக்கிப் பயணிப்பது ஏன்?
திடீரென மூன்று நட்சத்திரப் பட்டங்களை தோளில் சூடியிருந்த அதிகாரியொருவர் சித்திரவதைக் கூடத்துக்குள் பிரவேசித்தார்.
'ஏய் இங்கே பார்… சும்மா இருந்து நீ வீரனாகப் பார்க்கிறாய்… இவரைக் கண்டிருக்கிறாயா?'
நான் சிரமப்பட்டு கண்ணைத் திறந்து அதிகாரியின் அருகில் நின்று கொண்டிருந்த நபரைப் பார்த்தேன். அவர் எமது அன்புக்குரிய தோழர் சேன. எனக்குள் பேரானந்தத்தை உணர்ந்தேன். தோழர் சேன கொல்லப்பட்டிருக்கக் கூடுமென்றே நான் இதுவரை காலமும் எண்ணிக் கொண்டிருந்தேன். தோழர் சேனவை உயிருடன் பார்க்கக் கிடைப்பதே எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது? அருமையாக உரையாற்றக் கூடிய, சந்தேகங்களை தெளிவாக விளக்கக் கூடியவர் அவர். தோழர் சேனவை சினேகபூர்வமாகப் பார்த்தேன். தோழர் சேன மிகச் சீராக மீசை, தாடியை சீர்படுத்தி, தூய வெண்ணிறத்தில் ஆடையணிந்திருந்தார். என்னைக் கண்டதும் தோழர் சேன மனப்பூர்வமாகப் புன்னகைத்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது உடலில் காயங்களோ, தழும்புகளோ, இரத்தக் கறைகளோ எதுவுமே இருக்கவில்லை. அணிந்திருந்த மேற்சட்டையில் ஒரு பொத்தான் கூட உடைந்திருக்கவில்லை. இது எப்படி சாத்தியம்? நான் அவரை மீண்டும் உற்றுக் கவனித்தேன். தோழர் சேன என்னைப் பார்த்து அனுதாபத்தோடு புன்னகைத்தார்.
'தோழர் இனியும் பயனில்லை. அனைத்தும் முடிந்து விட்டது' என தோழர் சேன மெல்லிய குரலில் கூறினார். இது ஒரு மாயையா? சேகுவேரா போல வீற்றிருந்த, தாய்மண் அன்றேல் மரணம் என வசனங்கள் பேசிய தோழர், போராட்டம் நிறைவடைந்துவிட்டதெனக் கூறுகிறார். இது நடைபெறச் சாத்தியமான ஒன்றா?
'தோழர் நாங்கள் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். தோழருக்குத் தெரிந்த அனைத்தையும் தெரிவித்து விடுங்கள்.' எனக் கூறியவாறே அவர் மூன்று நட்சத்திரப் பட்டங்களை அணிந்திருந்த இராணுவ அதிகாரியின் கையிலிருந்த சிகரட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரட்டை எடுத்து தனது உதடுகளிடையே வைத்துக் கொண்டார். உடனே அதிகாரி தனது புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை தோழர் சேனவின் சிகரட்டைப் பற்ற வைக்கக் கொடுத்தார். தோழர் சேன தனது சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டார்.
சிகரெட் மேற்குலகின் கண்ணி எனக் கூறிய , பெரும் மலையைப் போல பலம் படைத்தவர் எனக் கருதியிருந்த தோழர் சேன எதிரிகளுடன் இணைந்து கொண்டது எப்போது? என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
'இவனை இழுத்து வாருங்கள்' என அதிகாரியிட்ட கட்டளைக்கிணங்க இராணுவத்தினன் ஒருவன் எனது கழுத்தில் பிடித்துத் தள்ளியவாறு அதிகாரியின் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றான். என்னைச் சங்கிலியால் அதிகாரியின் மேசையோடு பிணைத்து விட்டு பூட்டும் இட்டான். இப்போது நான் ஒரு நாய்க் குட்டி போல மேசையோடு கட்டப்பட்டிருக்கிறேன். சேனவும், அதிகாரியும் அவ் வட்ட மேசையின் இரு புறமுமிருந்த கதிரைகளில் அமர்ந்திருந்தனர்.
'எமக்கு இரண்டு பியர்களைக் கொண்டு வா. கொறிப்பதற்கும் ஏதாவது' என அதிகாரி கட்டளையிட்டார். இன்னுமொரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்ட அதிகாரி, தோழர் சேனவுடன் உரையாடத் தொடங்கினார்.
'நாங்கள் இரண்டு தடவைகள் மினுவாங்கொட பிரதேசத்துக்குப் போனோம். இன்னும் ஜயஸ்ரீயைக் கைது செய்ய முடியவில்லை. வேறு எங்கிருக்கக் கூடும்?'
'ஜயஸ்ரீக்கு வில்லியம் என்ற பெயரும் இருக்கிறது. ஜயஸ்ரீயின் மாமா ஒருவர் பொலன்னறுவை நகரத்தில் ஒரு பேக்கரி வைத்திருக்கிறார். அங்கே தேடினால் ஜயஸ்ரீயைக் கண்டுபிடிக்க முடியும்' என தோழர் சேன மெல்லிய தொனியில் கூறினார்.
எனது காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. ஜயஸ்ரீ எமது தோழர்களில் ஒருவர். ஜயஸ்ரீ பொலன்னறுவையில் ஒளித்திருக்கும் விடயத்தை நானும் அறிந்திருந்தேன். கடந்த வாரம் மூச்சுத் திணறும்வரைக்கும் எனது தலையை அழுக்கு நீர் வாளியில் முக்கி வைத்திருந்த போதும் கூட நான் தோழர் ஜயஸ்ரீ குறித்து ஒரு சொல்லைக் கூட வெளியிடவில்லை. என்னை விடவும் சிரேஷ்ட நிலையிலிருந்த தோழர் சேன, ஜயஸ்ரீ இருக்கும் இடத்தை எதையும் பொருட்படுத்தாமல் தெரிவித்திருக்கிறார்.
அதன் பிறகு இரண்டு கண்ணாடிக் குவளைகளோடும் , வாயில் எச்சிலை ஊற வைக்கக் கூடியளவு வாசனை வீசும் பொறித்த இறைச்சித் துண்டுகள் நிறைந்த பீங்கானோடும் பியர் போத்தல்களிரண்டை இராணுவத்தினன் ஒருவன் கொண்டு வந்தான். அதிகாரி, சேனவின் குவளையை பியரால் நிரப்பினார்.
'சியர்ஸ்' என மூன்று நட்சத்திரப் பட்டங்களை அணிந்திருந்த அதிகாரி என்னைப் பார்த்தவாறே கூறினார். சேனவின் குவளையிலிருந்த பியர் தீரத் தீர அதிகாரி அதனை நிரப்பிக் கொடுத்துக் கொண்டேயிருந்தார். தோழர் சேன எவ்விதக் குற்றவுணவுமற்று இறைச்சியை மென்றவாறு பியரைக் குடித்துக் கொண்டிருந்த அத் தருணத்தில் நான் ஒரு நாயைப் போல மேசையோடு பிணைத்துக் கட்டப்பட்டிருந்தேன். பல வாரங்களாக எமக்கு உணவாகத் தரப்பட்டது பழைய பாணும், தக்காளி ரசமும் மாத்திரமே. சில நாட்களில் இரவுகளில் அதுவும் வழங்கப்படவில்லை. எனது நாசிக்கு பொறித்த இறைச்சியின் வாடை எட்டியது.
எம்மை தீவிரவாத அரசியலுக்குக் கூட்டிக் கொண்டு வந்த முன்னணி நாயகனொருவன், எமது வழிகாட்டி இன்று இராணுவ அதிகாரியோடு அமர்ந்து பியர் அருந்துகிறான். நாங்கள் தோழர் சேனவை நம்பித்தானே இப் போராட்டத்தில் இணைந்தோம்? நாங்கள் எமது எதிர்காலம், கல்வி, வாழ்க்கை அனைத்தையும் அடகுவைத்து போராட்டத்தில் இணைந்து பணியாற்றியது தோழர் சேனவின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கத்தான். இப்போது தோழர் சேன எம்மை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார். எனக்கு தோழர் சேனவின் மீது வெறுப்பு தோன்றியது.
‘இவன் மிகவும் அழுத்தமானவன் அல்லவா?' என அதிகாரி என்னைக் காட்டி தோழர் சேனவிடம் கேட்டார். அவர் என்னைப் பார்த்து ஆமோதித்துத் தலையசைத்தார்.
'நாங்கள் ஒருநாள் இவனைத் தேடிப் போனபோது இவன் பள்ளியொன்றுக்குள் ஒளிந்திருந்து தப்பித்து விட்டான். அன்றே இவன் எனக்குக் கிடைத்திருந்தானானால் அன்றே இவனை ஒரு வழி பண்ணியிருப்பேன்' என மிரட்டியவாறே அதிகாரி இறைச்சியைச் சுவைத்தார். எனது சதையை அவர் கடித்து மென்று கொண்டிருப்பதாகவே அப்போது எனக்குத் தோன்றியது. எனக்குள் தோழர் சேன மீது பயங்கரமாக கோபம் எழுந்தது. அப்போது எனக்கு அச் சங்கிலியை உடைத்தெறிந்து எழுந்து கொள்ள முடியுமாக இருந்திருந்தால் நான் தோழர் சேனவின் கழுத்தை நெரித்திருப்பேன்.
'இவனைக் கொண்டு போய்க் கழுவு' என அதிகாரி இராணுவத்தினன் ஒருவனுக்குக் கட்டளையிட்டார். அவன் என்னை நெருங்கும்போது தோழர் சேன, பொறித்த இறைச்சித் துண்டொன்றை எனது கையருகே நீட்டினார். நான் அவரது கையைத் தட்டி விட்ட வேகத்தில் இறைச்சித் துண்டு தூரத்துக்கு எறியப்பட்டுப் போய் விழுந்தது. உடனே இராணுவத்தினன் பூட்ஸ் சப்பாத்தால் எனது விலா எலும்பில் குத்தினான். எனக்கு வலியை விடவும் மிகைத்துத் தோன்றியது கோபம். நானும் அவனைப் போல பிச்சைக்காரனென தோழர் சேன நினைத்திருக்கக் கூடும். சேனவின் கைகளுக்கு மெதுவாகவேனும் அடிக்கக் கிடைத்தது எனக்கு பெரிய விடயமாக இருந்தது.
இராணுவத்தினன் எனது கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு சென்று கீழ்த் தளத்திலிருந்த நீர்த் தாங்கியினுள் அமிழ்த்தினான். பல வாரங்களுக்குப் பின்னர் தேகத்தில் தண்ணீர் படுகிறதென்பதால் சுகமாக உணர்ந்தேன். நன்றாக முகத்தைக் கழுவிக் கொண்டேன். வியர்வை வாடை அகலட்டுமென அக்குள்களை நன்றாகக் கழுவிக் கொண்டேன். கந்தலாகிப் போயிருந்த காற்சட்டையைக் கீழே தாழ்த்தி தொடையிடுக்குகளையும் கழுவிக் கொண்டேன்.
அதன் பிறகு வேறொரு அறைக்கு நான் கூட்டிச் செல்லப்பட்டேன். அங்கு எனக்கு ஒரு பழைய சாரனொன்றும், பழைய மேற்சட்டையொன்றும் தரப்பட்டது. அங்கு கால்களில் விலங்கிட்டு அறைக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். எவரும் என்னைத் தாக்கவில்லை.
இரவானதும், தகட்டுப் பீங்கானொன்றில் சுடச்சுட சோறும், உருளைக் கிழங்குக் குழம்பும், டின் மீன் துண்டொன்றும் எனக்கு உணவாகத் தரப்பட்டது. நீண்ட காலத்துக்குப் பிறகு எனக்கு நல்லதொரு உணவு கிடைத்ததனால் நான் அறையின் சுவரில் சாய்ந்திருந்து, உண்ணவென பீங்கானைக் கையிலெடுத்தேன். எனக்கு இரண்டு, மூன்று வாய் சோறு கூட சாப்பிடக் கிடைக்கவில்லை. தோழர் சேன அறை வாசலருகே வந்து நின்றார்.
'தோழர் என்னோடு கோபமா? தோழர் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்ற தோழர் சேனவுக்கு அந்த இரண்டு மூன்று வசனங்களுக்கும் அதிகமாகக் கதைக்க நான் இடம்கொடுக்கவில்லை. சோற்றுப் பீங்கானை அவரது முகத்தை நோக்கி வீசியெறிந்தேன். தோழர் சேன சோற்றினாலும், குழம்பினாலும் குளித்திருந்தார். என்னைக் காவல்காத்துக் கொண்டிருந்த இராணுவத்தினன் எனது அடிவயிற்றில் உதைத்தான். நான் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு முகங்குப்புற நிலத்தில் கிடந்தேன். கால்களில் விலங்கிடப்பட்டிருந்ததனால் வலி பல மடங்கு அதிகமாக இருந்தது.
'முட்டாளே… நீ சாவிலிருந்து தப்பித்தது என்னுடைய வார்த்தையால்தான்' எனக்கு புறமுதுகு காட்டிச் செல்லும்போது தோழர் சேன சொல்லிக் கொண்டு போனார். அவர் இன்னும் ஏதேதோ சொன்னார் எனினும் அதிக வேதனையின் காரணமாக என்னால் அவற்றைப் புரிந்துகொள்ள இயலவில்லை. உதையின் காரணமாக நான் அவ்விடத்திலேயே சிறுநீரும் கழித்து விட்டிருந்தேன்.
அதன் பிறகு என்னை வதைக் கூடத்துக்குக் கொண்டு செல்லவில்லை. எனக்கு உணவும், துப்புரவான ஆடைகளும் வழங்கப்பட்டன. எனினும் வாரத்துக்கொரு தடவை விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டேன். என் மீது தாக்குதல்கள் நிகழ்த்தப்படவில்லை. உயரதிகாரியொருவர் என்னை விசாரித்தார். அவர் ஒரு கர்னல் பதவியிலிருப்பவராக இருக்கக் கூடும். தோள்களில் நட்சத்திரங்களுக்கு மேலதிகமாக அரச இலச்சினையொன்றும் இருந்தது. விசாரணையின் இடையே எனக்கு ஒரேஞ்ச் பார்லி சோடாவும் குடிக்கத் தரப்பட்டது. தோழர் சேனவின் காரணமாகத் தோன்றிய வெறுப்பின் காரணமாக அரசியலே எனக்கு வேண்டாம் என்று அப்போது தோன்றியிருந்தது. என்னிடம் காப்பதற்கு இனியும் ரகசியங்கள் எதுவுமில்லை. நான் ஒரேஞ்ச் பார்லியைப் பருகியவாறே அனைத்து ரகசியங்களையும் வாந்தியெடுத்திருந்தேன்.
நாரஹேன்பிட சிகேரா, களனி அஸித, தெஹிவளை உபுல், கடுனேரிய சிறில் ஆகிய அனைவரும் மறைந்திருக்கும் இடங்களை நான் கூறினேன். நான் கூறிய இடங்களுக்கு இராணுவம் போனது. உறுப்பினர்களை இழுத்து வந்து சித்திரவதைக் கூடத்தில் தள்ளியது. எனக்கு தோழர் சேனவை பல தடவைகள் அங்கே காண நேர்ந்தது. ஒரே படகில் நாங்கள் இருவரும் இப்போது. எனினும் இருவரும் ஒருவரோடொருவர் கதைத்துக் கொள்வதில்லை. நான் போகும், வரும்போதெல்லாம் தோழர் சேன என்னைக் கவனிக்காததுபோல, பணி நேரம் முடிந்து ஓய்விலிருக்கும் இராணுவத்தினரோடு சதுரங்கமோ, கேரமோ விளையாடிக் கொண்டிருப்பார். எனக்கு இரவில் விலங்கிடப்பட்டதெனினும், பகல் வேளைகளில் சுதந்திரமாக விட்டிருந்தார்கள். இரண்டு, மூன்று வாரங்கள் கழித்து இரவிலும் கூட எனக்கு விலங்கிடப்படவில்லை.
ஒரு நாள், என்னை இறுதியாக விசாரித்த கர்னல் வந்து என்னிடம் நான் இன்று விடுதலை செய்யப்படவிருப்பதாகத் தெரிவித்தார். என்னால் அதனை நம்ப முடியாமலிருந்தது. என்னைக் கொண்டு செல்லப் போவது படுகொலை செய்யத்தான் என எனக்குத் தோன்றியது. இராணுவத்தினன் ஒருவன் எனது கண்களைக் கட்டி இராணுவ வாகனமொன்றின் உள்ளே தள்ளினான். இன்னும் சில இராணுவத்தினர் வாகனத்துக்குள் ஏறிக் கொண்டனர். கதவுகள் மூடப்படும் சப்தம், வாகனம் உயிர்க்கும் சப்தம் போன்ற அனைத்தையும் செவிமடுத்தேன். வாகனம் பெருந்தெருவில் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தது. கண்கள் கட்டப்பட்டிருந்ததனால் எனக்கு எதுவுமே தென்படவில்லை.
'இதோ இங்கே ஓரமாக நிறுத்து' எனக்கு வாகன சாரதியின் அருகே அமர்ந்திருந்த அதிகாரியின் குரல் கேட்டது. வாகனம் வேகம் குறைந்து நின்றது. 'இவனை இறக்கி விடு' என்ற அந்தக் குரல் எனக்கு மீண்டும் கேட்டது. இராணுவத்தினன் ஒருவன் எனது கையைப் பிடித்து வெளியே இழுத்தான். கண்கள் கட்டப்பட்டிருந்ததால் எதுவுமே தெரியவில்லை.
இப்பொழுது துப்பாக்கியொன்று எனது தலைக்கருகே வைக்கப்பட்டு விசை இழுக்கப்படக் கூடும் என எனக்குத் தோன்றியது. எனது தலை சிதறி இரத்தம் பரவிச் செல்லும் விதத்தை கற்பனையில் கண்டேன். இன்னும் துப்பாக்கி வேட்டுச் சத்தம் எனக்குக் கேட்கவில்லை. நான் கற்சிலை போல அமைதியாக நின்றிருந்தேன். வாகனத்தின் கதவுகள் மூடப்படும் சப்தம், வாகனம் உயிர்ப்பிக்கப்படும் சப்தம் எனக்குக் கேட்டது. இன்னும் கூட வேட்டுச் சத்தம் ஏதுமில்லை.
வாகனம் சென்று விட்டிருந்தது. நான் தொடர்ந்தும் கற்சிலை போல நின்று கொண்டிருந்தேன். நான் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தேன். எனக்குள் அச்சம் தோன்றியது. நான் நின்று கொண்டிருப்பது தெருவின் மத்தியில். இப்பொழுது ஒரு லாரி வந்து எனது உடலை மோதிச் செல்லக் கூடும் என எனக்குத் தோன்றியது. நான் குனிந்து தரையைத் தடவிப் பார்த்தேன். எனது கரங்களுக்கு தார் வீதி தட்டுப்பட்டது. நான், எனது இடக்கைப் பக்கமாக சாய்ந்து நிலத்தைத் தடவித் தடவி முன்னோக்கி நகர்ந்தேன். எனக்கு நடைபாதை தட்டுப்பட்டது. நான் உடனடியாக நடைபாதையில் ஏறி நின்றவாறு இரு கண்களையும் கட்டியிருந்த துணியை அகற்றினேன்.
விடிகாலை நேரம். தெருவில் யாருமே தென்படவில்லை. நான் ஒரு கட்டடத்தைக் கண்டேன். நான் அந்தக் கட்டடத்தின் அருகே சென்றேன். அது ஒரு பத்திரிகை அலுவலகம். நான் அலுவலகத்தின் உள்ளே சென்றேன். காவல்காரர் என்னை அழைத்தார். நான் காவல்காரரைப் புறக்கணித்துவிட்டு அலுவலகத்தின் உள்ளே சென்றேன். "
நோயாளி திடீரென கண் விழித்தார்.
"அதன் பிறகு என்ன நடந்தது?" மனநல மருத்துவர் கேட்டார். நோயாளி பெருமூச்சு விட்டார். இரு விழிகளையும் மூடிக் கொண்டவர் தொடர்ந்தும் கதைக்கத் தொடங்கினார்.
"அந்த அலுவலகத்தில் என்னை அறிந்திருந்த பலரும் இருந்தார்கள். அவர்கள் எனக்கு உண்ணவும், பருகவும் தந்து என்னை எனது உறவினர் ஒருவரது வீட்டில் கொண்டு போய்விட்டார்கள். மாதக் கணக்கில் நான் அங்கிருந்தேன். வெளியே எங்கும் செல்லவில்லை. எனக்கு வாழ்க்கையின் மீதே வெறுப்பு தோன்றியது. தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்ற உணர்வு தீவிரமாகத் தோன்றியது. அவ்வாறிருக்கும்போதுதான் பௌத்த மதத்தின் பக்கம் வெகுவாக ஈர்க்கப்பட்டேன். நான் மார்க்ஸ்வாதத்தைத் தவிர்த்து விட்டு பௌத்த தத்துவங்களைப் படிக்கத் தொடங்கினேன்.
நாங்கள் வகுப்புவாதத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்தோம். அது தோல்வியைத் தழுவியது. எனவே ஆட்சியைக் கைப்பற்ற பௌத்த மதத்தை ஏணியாக்கிக் கொள்ள எனக்குத் தோன்றியது. எமது முந்தைய அரசகுமாரர்களும் அதைத்தானே செய்தார்கள்?! எனவே எனக்கு அதில் தவறேதும் தெரியவில்லை. சிவப்புப் பாதையை விடவும், பௌத்த பாதையானது, ஆட்சியமைக்க ஒரு குறுக்குவழியாக எனக்குத் தோன்றியது. சிறைப்பிடிக்கப்பட்ட பின்னர் நான் அனுபவித்த வேதனைகள், காட்டிக் கொடுப்புகள், எனது வாக்குமூலங்கள் போன்றவற்றின் காரணமாக எனக்குள்ளே ஒரு சுய பச்சாதாபம் தோன்றியது. அந்த பச்சாதாபம் படிப்படியாக குரோதமாக மாறியது.
அந்தக் குரோதத்தை, எமது தேசத்தின் ஏனைய இனங்களின் மீது பிரயோகிக்கத் தொடங்கினேன். சரியாகக் கூறுவதானால், ஜேர்மனியர்களால் துயரங்களை அனுபவித்த யூதர்கள், தமது கோபத்தை பாலஸ்தீனர்கள் மீது காட்டுவதை ஒத்தது அது. புதிய பௌத்த அடையாளத்தோடு நான் ஏனைய இனத்தவர்களின் மீது, அந்நிய மதத் தலைவர்களின் மீது, பிற மத ஸ்தலங்களின் மீது தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கினேன். தேவஸ்தானத்தின் பின்னால் மறைந்திருந்து எனது உயிரைக் காப்பாற்றிக் கொண்ட இறந்த காலத்தை நான் வெறுத்தேன். அந்த வெறுப்பின் காரணமாகத்தான் நான் இன்று பள்ளியை வெறுக்கிறேன் என நினைக்கிறேன்.
எனது அடிப்படை நோக்கத்தைப் புரிந்து கொண்ட, எனது நிஜ சொரூபத்தை உணர்ந்து கொண்ட நபர்கள் காரணமாக எனக்குள் பயத்தையும், அறுவெறுப்பையும் ஒன்றாக உணர்ந்தேன். இயலுமான சந்தர்ப்பங்களிலெல்லாம் நான் அவர்களை முத்திரை குத்தத் தொடங்கினேன். என்.ஜீ.ஓ காரர்கள், சமாதான வியாபாரிகள், பள்ளியின் ஒற்றர்கள், ஸீ.ஐ.ஏ காரர்கள் போன்ற முத்திரைகள். அதன் மூலமாக எனது நிர்வாணத்தை மூடிக் கொள்வதே எனது தேவையாக இருந்தது.
தீவிரமாகும் போதெல்லாம் நான் எனது மனைவியைத் தாக்கினேன். இடுப்புப் பட்டியைக் கொண்டு குழந்தையை அடித்தேன். தார்மீக, சாந்தமான ஒரு முகத்தை நான் உலகத்துக் காண்பித்தேன். எனினும் எனது குழந்தை என்னைக் காண நேரும்போதெல்லாம் பயத்தில் எங்கோ ஒளிந்துகொள்கிறது. எனது அக ஆத்மா செத்து விட்டிருக்கிறது.
டாக்டர், நான் பாழடைந்த பாலைவனமொன்றில் வழி தவறிப் போயிருக்கும் ஒருவனென சிலவேளைகளில் எனக்குத் தோன்றுகிறது. நான் எனக்குள்ளே வெறுமையாக உணர்கிறேன். நான் குரோத மனப்பான்மையில் மூழ்கியிருக்கிறேன். மக்கள் அரசியல் தூதுவராக இருந்த நான் பிற்போக்குவாதியாகவும், இனவாதியாகவும் மாறியிருக்கிறேன். எனக்கு எனது யதார்த்த நிலை சிக்கலாகவிருக்கிறது. எனக்கு எனது இருப்பே சிக்கலாகவிருக்கிறது."
நோயாளி ஒரு நீண்ட பெருமூச்சை விட்டார். தொடர்ந்து கற்சிலை போன்று அமைதியாக சிந்தனையில் ஆழ்ந்தார். மன நல மருத்துவர் நோயாளியை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். எனினும் நோயாளி நிச்சலனமாகவே இருந்தார்.